தைவானுக்கு எதிராக சீன ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சீன நாட்டின் ஏவுகணைகள் ஜப்பான் நாட்டிற்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவான் எல்லையில் இருந்து சீனா வீசிய 9 ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார். மேலும், இது ஜப்பானின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வருகை தந்தார். அவரது வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவர் தைவான் வந்தடைந்தார். நான்சி பெலோசி வருகைக்கு பதிலடி தரும் விதமாக தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீன படைகள் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுவருகின்றன.
இந்த நிலையில், சீன ராணுவம் ஏவிய 9 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லையில் விழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் - சீனா விவகாரத்தில் தைவான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடாக ஜப்பான் இருப்பதால், அந்நாட்டை அச்சுறுத்தும் நோக்கோடு சீனா ஏவுகணைகளை ஏவியிருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.