சிங்கப்பூரர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் சிங்கப்பூர் அக்கறை கொண்டிருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடினமான காலக்கட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தத் தருணத்தில், வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம், நலன், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்வதற்கும் உறுதியளித்தார்.
மேலும், ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்கும் வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்கும் முதலாளிகளுடன் கலந்துபேசி உரிய வசதிகள் செய்யப்படும். குடும்பத்தார் நண்பர்களுடன் ஊழியர்கள் தொடர்பில் இருக்க உதவி செய்யப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் ரமதான் மாதத்தில், முஸ்லிம் ஊழியர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இம்மாதம் இந்திய ஊழியர்கள் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டதைப் போலவே, அடுத்த மாதம் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்துக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கட்டுமானத்துறை ஊழியர்கள் வேலைக்கு வரக்கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வேளையில் கப்பல் பட்டறை மற்றும் கட்டுமானத்துறை ஊழியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகின்றது.
அவர்கள் தங்கும் விடுதிகளில் மருத்துவக்குழு, மனிதவள மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப் லைன் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் குடுப்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் விடுதியில் தங்கி உள்ள ஊழியர்களுக்கு 5 0ஜீ.பி ப்ரிப்பெய்ட் சிம்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பின் அதற்கும் முதலாளிகள் உதவி புரிவார்கள். வேலை அனுமதி சீட்டு உடையவர்கள் அதற்கான தீர்வைத் தொகை ( Levy) கட்ட வேண்டிய அவசியமில்லை என தளர்த்தப்பட்டுள்ளது.