ஒருபுறம் புதிய அரசுக்கும், அதிகார மாற்றமும் மும்முரமாக நடந்து கொண்டிருக்க சாமானிய இலங்கை மக்கள் எரிபொருட்களுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் வீதிகளில் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் கையிருப்பு கிட்டத்தட்ட தீரும் நிலையில் உள்ளது. தலைநகர் கொழும்பில் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் மட்டும் எரிபொருள் கிடைப்பதால், விடிவதற்கு முன்பே மக்கள் அங்கு காத்திருக்கத் தொடங்குகிறார்கள். விடிந்த பின் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை நீண்ட வரிசையில் எரி பொருளுக்கான காத்திருப்பு தொடர்கிறது.
இந்தியாவில் இருந்து 4 லட்சம் மெட்ரிக் டன் டீசல் 12 ஷிப்மெட்களாக அனுப்பப்பட்டுள்ளது. இவை வந்தால் மட்டுமே இலங்கையில் எரிபொருள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் மட்டுமின்றி அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கையிருப்பும் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதோடு உணவுப் பொருட்களுக்கும் மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது இலங்கை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.