ஐந்து வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாக காரை இயக்கி அமெரிக்கச் சாலைகளில் சென்றது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக அவர்களைக் கடந்து சென்றுள்ளது. இதனையடுத்து அந்தக் காரை துரத்திய போலீஸார், சிறிது நேரத்தில் அந்தக் காரை சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர். அப்போது அதன் ஓட்டுநரைப் போலீஸார் வெளியேவர கூறியபோது, வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெளியே வந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்தச் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்தச் சிறுவன் அளித்த பதில் போலீஸாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வாகனம் தனது பெற்றோரின் வாகனம் எனவும், தனக்காக விலை உயர்ந்த சொகுசு வாகனமான லம்போகினி காரை வாங்க கலிபோர்னியாவுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அந்தச் சிறுவனைச் சோதித்துப் பார்க்கையில், சிறுவனிடம் வெறும் மூன்று டாலர்கள் மட்டுமே பணம் இருந்துள்ளது. இதனையடுத்து, அச்சிறுவனின் பெற்றோரை நேரில் வரவழைத்துள்ளனர் போலீஸார். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.