ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். பல உயர் அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து 50% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க் “நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது. ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாத பணி நீக்க ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி வழங்கப்படுவதை விட 50% அதிகமானது” எனக் கூறினார்.
ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் மெட்டா நிறுவன ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அந்தத் தகவல் உண்மையாகியுள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 87 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் மெட்டா நிறுவனத்தில் பணி நீக்கம் செய்த 11 ஆயிரம் ஊழியர்கள் என்பது மொத்த ஊழியர்களில் 13 சதவிகிதமாகும்.
விளம்பர சந்தையில் வருவாய் குறைந்ததை அடுத்து மெட்டா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டதால் தன் செலவினங்களைக் குறைக்க ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.