காலை தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை இளைஞர்களின் அமைதிக்கும், குனிந்த தலை நிமிரா பண்பிற்கும் காரணமாகி போனது ஸ்மார்ட் போனும், இணையதளமும்.
அதில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் நேரத்தை செலவிடுவது ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தான். அப்படி இருக்க, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியது இளைய சமுதாயம் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
நேற்று ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று செயலிகளும் திடீரென வேலை செய்யாமல் நின்றது. இவை மூன்றிலும், புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனாளர்கள் தவித்தனர். இவை மூன்றும் வேலைசெய்யாததை ட்விட்டர் மூலமாக ட்ரெண்ட் ஆக்கினர். இந்த ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் இன்று காலை இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“இன்று சில பயனாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எங்களுடைய சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பிரச்சனை சரியானாலும் நம் மீம் கிரியேட்டர்கள் இந்நிறுவனங்களின் தலைவரான மார்க் சக்கர்பர்க்கை கிண்டல் செய்து மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.