செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், நமது நடத்தை மட்டுமன்றி உடலமைப்பும் மாறி வருவதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக் கழக விஞ்ஞானிகள், இளைஞர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தரக்கூடிய முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு போன்ற அமைப்பு வளர்வதை கண்டறிந்துள்ளனர்.
செல்போனில் இருந்து வரும் கதிரியக்கம் காரணமாகவும், செல்போன்களைப் பயன்படுத்தும் போது அதன் திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்தபடியே வைத்துள்ளோம். அதனால், தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாறுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசைநார்கள் வளர்கின்றன. இதனால் மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகப்படியான செல்போன் பயன்பாடு மனிதனின் பரிணாமத்தையே மாற்றியமைக்கும் நிலை வரை மாறிவிட்டது என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.