உலகெமெங்கும் அச்சுறுத்திவரும் கரோனவைக் கட்டுப்படுத்த, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கே செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகள் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு பைசர் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாடுகளில் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகம், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தியபோது, அதனால் அவர்களுக்கு கவலைப்படத்தக்க வகையில் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகம் கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கழகத்தின் ஒப்புதலை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இருப்பினும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதைப் பற்றி மக்களே முடிவெடுப்பார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் தெரிவித்துள்ளார்.