எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். சரிபார்க்கப்பட்ட பயனர் என்பதை குறிக்க வழங்கப்படும் ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.
இதிலும் தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பே மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் மே 21 ஆம் தேதி ப்ளூ டிக்கிற்கான கட்டணம் செலுத்தாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் போன்றோரின் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.
அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ராகுல் காந்தி போன்றோரின் தனிப்பட்ட கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. விளையாட்டு பிரபலங்கள் சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் ப்ளூ டிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகளும் மாற்றுக்கருத்துகளும் எழுந்த வண்ணம் இருந்தன.
நடிகர் பிரகாஷ் ராஜ், “பை பை ப்ளூ டிக்... நீங்கள் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது பயணம், பேச்சு, பகிர்வு மக்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கும். உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் 10 லட்சத்திற்கு அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட சிலரின் கணக்குகளுக்கு மீண்டும் ப்ளூடிக் வழங்கப்பட்டுள்ளது.