மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சமூகவலைதங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்தநாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் நய்பிடாவில் போராடிய மக்களை இராணுவம் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கலைத்தது. அதேபோல், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவின் ஏழு நகரங்களில், தற்காப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், மக்கள் போராட்டம் நடத்துவதையும், ஐந்து பேருக்கு மேல் கூடுவதையும் மியான்மர் இராணுவம் தடை செய்துள்ளது. மேலும், இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை விரட்ட, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது, இராணுவம் (ரப்பர் குண்டுகளை வைத்து) துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் ஒருவர், மூன்று போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு ரப்பர் குண்டால் தாக்கியது காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.