அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் நேற்று பதவி ஏற்றார். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமைக்குரியவர். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மாளிகையில் அடியெடுத்து வைத்த ஜோ பைடனுக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அதேபோல், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதிலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பதவியேற்பு விழாவில் பேசிய ஜோ பைடன், "இது அமெரிக்காவின் நாள். இது ஜனநாயகத்தின் நாள். அமெரிக்க அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன். அரசமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவேன். ஒற்றுமையுடன் இருந்தால் எந்தக் காலத்திலும் நாம் தோற்கமாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன்" என நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஜோ பைடனின் உரை இருந்தது. அதில், நாங்கள் (We) எனும் ஆங்கில வார்த்தையை 79 முறை பயன்படுத்தினார் பைடன். அதைவிட மிகுந்த சுவாரசியம் ஜோ பைடனின் உரையைத் தயாரித்தவர் ஒரு இந்தியர். தெலுங்கானாவைச் சேர்ந்த வினை ரெட்டி என்பவரே ஜோ பைடனின் தொடக்க உரையைத் தயாரித்தவர்.
அதேபோல், பதவியேற்றபின் வெள்ளை மாளிகைக்குச் சென்ற ஜோ பைடனுக்கு டிரம்ப் விட்டுச் சென்ற கடிதம் மேலும் சுவையைக் கூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பதவிக்காலம் முடிந்துசெல்லும் அதிபர் அப்பதவியின் தனித்துவம் குறித்து வரப்போகும் அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைக்க வேண்டும் என்பது மரபு. ட்ரம்ப் எழுதிய கடிதம் ஓவல் அலுவலகத்திலிருந்து ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என பைடன் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
2017 ஆம் ஆண்டு டிரம்புக்கு ஒபாமா எழுதிய கடிதத்தில் ''இது ஒரு தனித்துவமான அலுவலகம்'' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஒபாமாவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் எழுதிய கடிதத்தில் ''உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த பகுதி இன்று தொடங்கி இருக்கிறது'' எனத் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ஜோ பைடனுக்கு கடிதத்தின் மூலமாக டிரம்ப் என்ன தெரிவித்திருப்பார் என்பது ஆர்வத்தைக் கூட்டி இருக்கிறது என்றே சொல்லலாம்.