கரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து, பலி எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் தற்போது கரோனா வைரஸ் என அழைக்கப்படும் கோவிட்- 19 க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல் ஒன்று அதிர்ச்சியைத் தருகிறது. அதில் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும், அது 'டீ614ஜி' என்ற வகையைச் சேர்ந்ததாக அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பத்து மடங்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர் தமிழ்நாட்டின் சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதே போல மலேசியாவைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் இந்தத் தொற்றானது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் இறுதியிலேயே வைரஸ் உருமாற்றம் குறித்த தகவல் பரவிய நிலையில் மலேசியாவில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் பாகிஸ்தானிலும் இந்த வகைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த உருமாற்றம் தற்போது நடக்கின்ற தடுப்பூசி ஆய்வுகளைப் பாதிக்குமா என்பது குறித்தான சந்தேகமும் வலுத்துள்ளது.