நேற்று சென்னையில் பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இதுபோல் யூட்யூப் சேனல்களில் அருவருக்கத்தக்க, ஆபாசமான வீடீயோக்கள் ஏற்கனவே பதிவேற்றியிருந்தால் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று முன்தினம் 'சென்னை டாக்ஸ்' என்ற அந்த யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. காரணம் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலுக்கு வார்த்தைகளிலே சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமான பதில்களை அளித்திருந்தார். அந்த வீடியோவை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி அப்படியே அந்த சேனலும் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசின் பாட்சா, கேமராமேன் அஜய் பாபு மற்றும் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அந்த வீடியோவில் பேசியிருந்த பெண்ணிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுபோல் யூட்யூப் சேனல்களில் அருவருக்கத்தக்க, ஆபாசமான வீடீயோக்கள் இருந்தால் உடனடியாக அனைத்தையும் நீக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற வீடியோக்களை யூட்யூப்பில் இனி பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.