
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த அதிபர் தேர்தலில், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தேர்தலை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்புக்கு ஆயிரக்கணக்கான கோடியை எலான் மஸ்க் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக (DOGE) எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இது, அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசாங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நியமிக்கப்பட்ட பிறகு, அவரின் டெஸ்லா ஷோரூம்கள், கார்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேசன் உள்ளிட்டவைகள் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது
இந்த தாக்குதல்கள் குறித்து எலான் மஸ்க் கூறியதாவது, ‘இந்த தாக்குதலை சில இடதுசாரி பில்லியனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது நிறுவனம் மின்சார கார்களை மட்டுமே உருவாக்கி வருவதால் தாக்குதல் நடத்த குறிவைப்பதற்கு தகுதியற்றது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெஸ்லா ஆட்டோமொபல் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சிரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘டெஸ்லா மீது நாசவேலை செய்யும் நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், இந்த தாக்குதல்களுக்கு நிதியளிப்பவர்களுக்கும் இந்த தண்டனை வழங்கப்படும். நாங்கள் உங்களை தீவிரமாக தேடுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.