இருநாட்டு உறவுகளைச் சீர்குலைக்கும் விதமாக நடந்துகொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமருக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள ஸ்காட் மோரிசன், கரோனா மற்றும் ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது, இதனால் சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியபோது, அதற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசும் கருத்துகள் தெரிவித்தது. அதேபோல, சீனாவின் எதிர்ப்பை மீறிப் பாதிக்கப்பட்ட ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறியது, ஹாங்காங்கில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்த சீனாவை வற்புறுத்தியது எனத் தொடர்ந்து சீனாவின் செயல்களை அவர் எதிர்த்து வருகிறார். இதுதவிர, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட ‘பைவ் ஐ’ ஒப்பந்தம் மூலம் உளவுத்தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த ஐந்து நாடுகளும் வழிவகுத்துள்ளது. இது சீனாவுக்கு மிகப்பெரிய அச்சறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான் ஆஸ்திரேலியா குறித்து நேற்று பேசுகையில், "பிரதமர் ஸ்காட் ஜான் மோரின் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு, சீனாவுக்கு எதிராகத் தூதரக உறவுகள் கெடும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதைப் பல முறை சீனா சுட்டிக்காட்டிவிட்டது. ஆனால், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சீனாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா செயல்பட்டு வருகிறது. மேலும், ஆஸ்திரேலிய ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான கருத்துகள் வலிந்து பரப்பப்படுகின்றன. இதனால் இருநாட்டுத் தூதரக உறவுகள் முறியும் நிலை ஏற்படலாம்.
ஆஸ்திரேலியா உட்பட 5 நாடுகள் இணைந்து ‘பைவ் ஐ’ அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர்கள் 5 அல்ல 10 கண்கள் கூட வைத்துக் கொள்ளட்டும். ஆனால், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி விவகாரங்களில் தலையிட யார் முயன்றாலும், அவர்கள் கண்கள் குருடாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளட்டும்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா இடையேயான உறவு மோசமாக உள்ள சூழலில் சீனத் தூதரின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.