சீனா, தனது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1980 முதல் தனது மக்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டுவரை அங்குள்ள தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 2016 கு பின், இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா தன் மக்களுக்கு அனுமதியளித்தது.
இந்தநிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்தது. அதேநேரத்தில் கடந்த 10 வருடங்களில், வேலை செய்யும் வயதுடையவர்கள் குறைந்து வருவதும், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அதிகரித்து வருவதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, தனது மக்களை மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவும், ஓய்வு பெரும் வயதை உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக அந்தநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, நீண்டகால பொருளாதார நலன்களைப் பாதிக்குமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.