இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் சர்ச்சை எழுந்தது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கோவாக்சினைவிட விலை குறைவாக இருக்கும்போது, அதிக விலை கொடுத்து கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
கோவாக்சினின் அதிக விலை, விரைவான பேச்சுவார்த்தைகள், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல்கள் நிலுவையில் இருப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், தடுப்பூசி வாங்குவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊழல் செய்துவிட்டதாகவும், பிரேசிலுக்கும் கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஏற்கனவே கரோனா பரவலைக் கையாண்ட விதம் தொடர்பாக அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது அதிருப்தியில் இருக்கும் அந்த நாட்டு மக்கள், அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு அவருக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஊழல் புகாரைத் தொடர்ந்து ஒப்பந்தம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர், ஜெய்ர் போல்சனாரோமீது கோவாக்சின் ஒப்பந்தம் தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சர், கோவாக்சினுடன் போடப்பட்ட 324 மில்லியன் டாலர் ஒப்பந்தம் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டுடனான கோவாக்சின் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.