கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கைக் கடைப்பிடிக்கச் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத சூழலில், சமூக இடைவெளி மட்டுமே இதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழியாகப் பார்க்கப்படுகிறது.
உலகநாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றன. அதேபோல பல உலகநாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கைக் கடைப்பிடிக்கச் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றிற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் போல்சனாரோ, பிரேசில் நாட்டில் பலி எண்ணிக்கை 2000-ஐ கடந்தும் இன்னும் ஊரடங்கை அறிவிக்கவில்லை. ஊரடங்கு பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறும் அவர், பிரேசிலில் அதனை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிபர் போல்சனரோவின் நிலைப்பாட்டையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தப் பேட்டி பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹென்ரிக் மாண்டெட்டாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் போல்சனாரோ.