Skip to main content

கரோனா ஏற்படுத்திய மாற்றம்... அதிர்ச்சி தரும் நோயாளியின் எச்சரிக்கை...

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

body transformation of a corona patient

 

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் புகைப்பிடம் சமூக ஊடகங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர், இந்த வைரஸ் பாதிப்பினால் தனது உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.  
 


கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஷால்ட்ஸ் எனும் அந்த நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஆறு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் கரோனா பாதிப்புக்கு முந்தைய தனது புகைப்படத்தையும், தற்போது மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். கரோனா பாதிப்புக்கு முன் 86 கிலோ எடை இருந்த அவர், தற்போது 63 கிலோவாகக் குறைந்துள்ளார். சுமார் 6 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனக்கு 20 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

கரோனாவின் தாக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதாகக் கூறும் மைக், படுக்கையிலிருந்து எழுந்து நின்று புகைப்படம் எடுக்கவே உடல் சோர்வாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பதிவிட்டுள்ள அவர், ‘யார் வேண்டுமானாலும் கரோனாவால் பாதிக்கப்படலாம் என மக்களை எச்சரிக்கச் செய்ய நினைக்கிறேன். கரோனா பாதிப்பால் எனது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

 


மேலும், படிப்படியாகக் குணமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், மக்களை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஒருவர் கரோனாவால் உடல் நலிவுற்று அவதியுறுவது நோயின் தீவிரத்தைப் பலருக்கும் உணர்த்துவதாக உள்ளதாக சமூகவலைத்தளங்களில் மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்