18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கண்டங்கள் பிரிந்த நிகழ்வை அண்டார்டிகா கண்டத்தின் ஒரங்களில் உள்ள பிளவுகள் உறுதி செய்வதாக புதிய ஆய்வு வெளியாகி இருக்கிறது.
இன்றை பூமியின் நிலப்பரப்பும் கண்டங்களின் அமைவிடமும் தொடக்கத்திலிருந்து உருவானது அல்ல. இப்போதைய கண்டங்கள் அணைத்தும் ஒரே நிலப்பகுதியாக ஒட்டியிருந்து, பின்னர் வடக்கேயும் தெற்கேயுமாக பிரிந்து நகர்ந்து லாரசியா, கோண்ட்வானா என்ற இரு நிலப்பகுதியாக மாறின.
18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கே ஒட்டியிருந்த கோண்ட்வானா கண்டம் பல நிலத்தட்டுகளாக பிரிந்து வடக்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நகரத் தொடங்கின. தென்னமெரிக்கா வட அமெரிக்காவுடனும், ஆப்பிரிக்கா ஆசியாவின் மேற்குப் பகுதியோடும், இந்தியா ஆசியாவின் தெற்கு பகுதியிலும் மோதி ஒட்டின. ஆஸ்திரேலியா கிழக்குப் பகுதியில் நகர்ந்து தீவுக் கண்டமாக அமைந்தது.
இந்தக் கண்டங்கள் அனைத்தும் அண்டார்டிகாவை ஒட்டியே இணைந்திருந்தன. திடீரென பூமியில் ஏற்பட்ட பிரளயம் காரணமாக மீண்டும் இந்த நிலத்தட்டுகள் அனைத்தும் பிரிந்து நகரத் தொடங்கியதாக புவியியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். அப்படிப்பட்ட பிளவு நிகழ்ந்ததற்கு சாட்சியாக ஆஸ்திரேலியா கண்டம் அண்டார்டிகாவிலிருந்து பிரிந்ததுதான் என்பதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிறார் புவி ஆய்வாளர் எப்பிங். ஐரோப்பிய யூனியன் அனுப்பிய புவி ஆய்வு செயற்கைக் கோள் அனுப்பிய படங்களை வைத்து இவரும் இவருடைய குழுவினரும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்தச் செயற்கைக்கோள் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எடுத்த புள்ளிவிவரங்களை எப்பிங் குழு ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. அண்டார்டிகாவின் நிலத்தட்டு அடர்த்தியையும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். கிழக்கு அண்டார்டிகாவின் நிலத்தட்டு 40 முதல் 60 கிலோமீட்டர் அடர்த்தியும், மேற்கு அண்டார்டிகாவின் நிலத்தட்டு 20 முதல் 35 கிலோமீட்டர் அடர்த்தியும் உள்ளதாக எப்பிங் தெரிவித்துள்ளார்.
கிழக்கு அண்டார்டிகாவின் நிலத்தட்டுப் பகுதியிலிருந்துதான் ஆஸ்திரேலியா பிரிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி கிழக்குப் அண்டார்டிகாவின் ஓரத்திலிருந்து பிரிந்திருப்பதற்கான பிளவுகள் ஒத்திருக்கின்றன என்கிறார் எப்பிங்.