தற்போதைய சூழலில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதுபற்றி கூறியுள்ள அமெரிக்கா வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், "பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான, நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை மிக முக்கியம். தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், அது பாகிஸ்தானுக்கு தான் ஆபத்து. நிலமை மிக மிக மோசமாகிவிடும். இது இருநாடுகளுக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாகிவிடும். பாகிஸ்தான் அரசு சில பயங்கரவாத இயக்கங்களையும், அவற்றின் சொத்துகளையும் முடக்கியுள்ளது. அதேபோன்று ஜெய்ஷ் இ முகமது போன்ற அனைத்து அமைப்புகளின் மீதும் மிகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா, பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது” என கூறினார்.
அமெரிக்கா இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்று காலை இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 24 வயதுடைய இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.