உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ற வகையில் சீனா சுமார் 22 லட்சம் வீரர்களுடன் முதலிடத்திலும், இந்தியா சுமார் 14 லட்சம் வீரர்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா சுமார் 13.5 லட்சம் வீரர்களுடன் மூன்றாவது இடத்திலும், வடகொரியா சுமார் 12 லட்சம் வீரர்களுடன் நான்காவது இடத்திலும், ரஷ்யா சுமார் 8.5 லட்சம் வீரர்களுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 138 கோடி. இவர்களில் ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் சுமார் 62 கோடி. இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 130 கோடி. ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் 49.5 கோடி. அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை சுமார் 33 கோடி. ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் சுமார் 12 கோடி. வடகொரியாவின் மக்கள் தொகை 2 கோடியே 54 லட்சம். இவர்களில் ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் 1 கோடியே 2 லட்சம். ரஷ்யாவின் மொத்த மக்கள்தொகை 14.21 கோடி. ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் 4 கோடியே 67 லட்சம்.
உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மிகப்பெரிய ராணுவங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவை பார்த்தால், மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்காதான் மிக அதிகபட்சமாக, அதாவது உலகின் மொத்த ராணுவ நிதி ஒதுக்கீட்டில் 35 சதவீதம் நிதியை ஒதுக்குகிறது. உலகின் முதல் பெரிய ராணுவத்தை வைத்திருக்கிற சீனா 13 சதவீதத்தையும், இரண்டாவது பெரிய ராணுவத்தை வைத்திருக்கிற இந்தியா 3.7 சதவீதம் நிதியையும், ஐந்தாவது பெரியராணுவத்தை வைத்திருக்கிற ரஷ்யா 3.8 சதவீதம் நிதியையும் ஒதுக்குகின்றன. இந்த பட்டியலில் வராத சவூதி அரேபியா 4 சதவீதம் நிதியை ராணுவத்துக்கு ஒதுக்குகிறது.
ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில் 137 நாடுகள் மட்டுமே ராணுவத்துக்கு தனியாக நிதி ஒதுக்குகின்றன. இவற்றில், இந்த ஐந்து நாடுகள் மட்டும் ராணுவத்துக்கு 59.5 சதவீதம் நிதியை செலவிடுகின்றன. மீதமுள்ள நாடுகள் அனைத்தும் சேர்ந்து ராணுவத்துக்கு செலவிடும் தொகை 40.5 சதவீதம் மட்டும்தான்.
உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை வைத்திருக்கிற வடகொரியா தனது ராணுவத்துக்காக செலவிடும் தொகை மிகவும் குறைவு என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ராணுவ செலவினங்களில் வடகொரியா 26 ஆவது இடத்தில் இருக்கிறது என்பதே உண்மை. இந்த நாட்டைத்தான், ராணுவத்துக்காக மிக அதிகமாக செலவிடும் அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிப் பார்க்கிறது.