Skip to main content

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Pakistan's former Prime Minister Imran Khan 10 years in prison!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. இதில், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. அதன்படி, அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனையடுத்து, இம்ரான் கான் தன் மீது விதித்த தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும், இந்த வழக்கில் பாகிஸ்தான் தெஸ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷி மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தன. இந்த நிலையில், இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (30-01-24) தீர்ப்பளித்துள்ளது. அதில், இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்