வசதி வாய்ப்பற்ற குழந்தைகள், ஆரம்பக் கல்வியைக் கற்பதற்கு வழி செய்யும் வகையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் பள்ளிக்கூடங்களைத் திறக்க இருக்கிறார்.
ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய இணையதள வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். 'எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சில முயற்சிகளைச் செய்ய இருக்கிறேன்' எனக் கடந்த 2018 -ஆம் ஆண்டே அறிவித்தார். தற்போது, அதன் அடுத்த கட்டம் குறித்தான தகவலைத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், வாஷிங்டன் நகரில் அவர் தொடங்கியுள்ள பள்ளியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது தொடக்கம் தான். பெசோஸ் அகாடமி வரும் அக்டோபர் 19-ம் தேதி திறப்பு விழா காண இருக்கிறது. வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்காக நாங்கள் உருவாக்கி வரும் பள்ளியில், இது முதல் பள்ளிக்கூடம். கரோனா நேரத்திலும் இதைச் சாத்தியமாக்க உழைத்த குழுவினருக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.