90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. அகாடெமி விருதுகள் என்று அழைக்கப்படும் இந்த விருதுகளை கடந்த 1929ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்டு சயின்ஸ் என்ற நிறுவனம். சினிமாத்துறையில் உள்ள பல்வேறு பிரிவினரைக் கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதுகள் கலை மற்றும் தொழில்நுட்பப்பிரிவு என 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
மிகவும் கோலாகலமாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும் விழாவில், சினிமாத்துறையில் சிறந்துவிளங்கி பல சாதனைகளைப் படைத்து தற்போது உயிருடன் இல்லாதவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது, சினிமாத்துறையில் தமிழ்மொழியில் அறிமுகமாகி, பின்னர் பலமொழிகளில் நடித்து, இந்தி சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜேம்ஸ் பாண்ட் புகழ் ரோஜெர் மூர், ஜோனத்தன் டிம்மி, ஜியார்ஜ் ரோமரோ, ஹாரி டீன் ஸ்டாண்டன், ஜெரி லூவிஸ், ஜோனி மொரீயு மற்றும் மார்ட்டின் லாண்டோ உள்ளிட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.