இன்று காலை முதல் அஃபெலியன் நிகழ்வு தொடங்கி விட்டதாகவும், இதனால் பூமியில் வழக்கத்தைவிட குளிர் அதிகரிக்கும் என்றும், உடல் உபாதைகள் அதிகரிக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இன்று அதிகாலை 5.27 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், இதனால் காலநிலை கடந்த ஆண்டுகளை விட குளிராக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் மனிதர்களுக்கு தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் உலா வந்த தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவை உண்மையா? அஃபெலியன் நிகழ்வு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் மற்றும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கத்தில் ''பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 9 கோடி கிலோமீட்டர் என்றும், அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் இந்த தூரமானது 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரிக்கும் என்றும், இதனால் மனிதர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் போலியான செய்தி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர். இதுதான் உண்மை. அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் சூரியனிடமிருந்து பூமி 152 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். அதாவது 2 மில்லியன் கிலோமீட்டர் தான் வித்தியாசம். இந்த வித்தியாசம் மனிதர்களுக்கு எந்த உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாது'' என விளக்கமளித்துள்ளனர் விஞ்ஞானிகள்.