உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா தொற்று காரணமாக 2.84 கோடி திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பலான மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதனால் மற்ற நோய்களுக்கான சிகிச்சைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டன் ஜர்னல் ஆஃப் சர்ஜரி அமைப்பு, கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் தள்ளிவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் 71 நாடுகளில் 359 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, கடந்த மூன்று மாத காலத்தில், இடப்பற்றாக்குறை, மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் கரோனா தவிர்த்த பிற நோய்களுக்கான 2.84 கோடி அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சாதாரணமாக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கு அறுவை சிகிச்சைகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான இடப்பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக லட்சக்கணக்கான புற்றுநோய் மற்றும் மற்ற நோய் உடைய நோயாளிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.