கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராஜேந்திரன் (50), விவசாயி. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் ஊ. எடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கரும்பு வயலில் மாடுகள் மேய்ந்ததாக கூறி 3 மாடுகளை எடக்குப்பம் ராஜேந்திரன் இழுத்துச் சென்று தனது வீட்டில் கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மாடுகளைத் தருமாறு முதனை ராஜேந்திரன் கேட்டபோது, வயலில் மேய்ந்ததற்கு இழப்பீடாக பணம் அல்லது உர மூட்டைகள் வாங்கித் தருமாறு எடக்குப்பம் ராஜேந்திரன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மாடுகளைத் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (24.05.2021) முதனை ராஜேந்திரன் அவரது மகன்கள் ராஜ்குமார், சுந்தர்ராஜன் (29), மற்றும் உறவினர்களான ஜெயராமன், தமிழ்மணி, ரமேஷ்கண்ணன், சந்திரசேகர், மணிகண்டன், சக்திவேல் ஆகியோருடன் சென்று தனது மாடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். அப்போது எடக்குப்பம் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களான ராஜேஷ் (24), தளபதி சுரேஷ், கருணாநிதி(35) ஆகியோருடன் சேர்ந்து முதனை ராஜேந்திரன், அவரது மகன்கள் ராஜ்குமார், சுந்தர்ராஜன் ஆகிய 3 பேரையும் இரும்புக் குழாயால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக முதனை ராஜேந்திரன், அவரது மூத்த மகன் ராஜ்குமார் ஆகிய இருவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊ. எடக்குப்பம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேசமயம் முதனை ராஜேந்திரனின் இளைய மகன் சுந்தர்ராஜன் மட்டும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று, மருத்துவமனையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக மருத்துவமனை ஊழியர்கள் படுக்கைகளை சுத்தம் செய்தனர். அப்போது சுந்தர்ராஜன் படுக்கை காலியாக இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊழியர், கழிவறையை சுத்தம் செய்யச் சென்றபோது, கழிவறையின் உள்பகுதியில் தாழ்ப்பாளிட்டு, தண்ணீர் குழாய் திறந்து தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருந்துள்ளது. நீண்டநேரம் கதவைத் தட்டியும், யாரும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த ஊழியர், பணியிலிருந்த காவலாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற காவலாளிகள், கழிவறையின் பின்பக்கமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது, மற்றொரு ஜன்னலில் சுந்தர்ராஜன், சட்டை துணியால் தூக்கிட்டுப் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தலைமை மருத்துவ அலுவலர் எழில் விருத்தாசலம், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன், விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து சுந்தரராஜனின் பேண்ட் பாக்கெட்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் 'என் சாவுக்குக் காரணம் மேற்கண்ட எதிரிகள்தான், அவர்களை சும்மா விடாதீர்கள், அவர்களுக்குத் தூக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்' என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சுந்தர்ராஜன் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது, “சுந்தரராஜனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உறுதியளிக்க வேண்டும், மேலும் சாவில் மர்மம் இருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி மருத்துவர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லையென்றால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம்” என போலீசாரிடம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உடலை வாங்காமல் மறுத்துவருகின்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.