சேலத்தில் பதினைந்து வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அவருடைய ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடியைச் சேர்ந்தவர் சசிகுமார் (23). இவருடைய உறவினர்கள் வீடு சேலத்தில் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் வந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகிய அவர், தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று நம்ப வைத்துள்ளார். அந்தச் சிறுமியும் நம்பி உள்ளார். அவர் மீது சிறுமிக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது.
அதனால் அந்த இளைஞர் அழைத்த இடத்திற்கெல்லாம் அவருடன் காரில் சென்று வந்துள்ளார். அவ்வாறு ஒருநாள் காரில் அழைத்துச்சென்ற சசிகுமார், அவரை காதலிப்பதாக கூறி தன் வலையில் வீழ்த்தி உள்ளார். சிறுமியுடன் செல்போனில் சாட்டிங் செய்து வந்த சசிகுமார், சிறுமியின் ஆபாச புகைப்படத்தை அவரிடமிருந்து வாங்கியுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியிடம் நிர்வாண புகைப்படத்தை காட்டி, அடிக்கடி அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் பணம் பறித்து வந்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். இவ்வாறு சிறுமியிடம் 1.70 லட்சம் ரூபாய் சுருட்டி இருக்கிறார் சசிகுமார். அந்தச் சிறுமி, தனது தாத்தா வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுத்து வந்துள்ளார். வீட்டில் இருந்த பணம் மாயமானது குறித்து விசாரித்தபோதுதான் சிறுமி ஒரு வாலிபரிடம் மாட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியும், அவருடைய உறவினர்களும் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தனர். உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படையினர், போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகுமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும், சைபர் கிரைம் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.