
விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலவனூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்றது. இதற்கான பணியை அந்த கிராம மக்கள் தங்கள் ஊர் சுடுகாட்டுப் பகுதி அருகே செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் நாய் ஒன்று பூமியில் தன் காலால் பிறாண்டி, அந்த இடத்திலிருந்து துணியை வெளியே இழுத்தது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அங்கு வேலை செய்த மக்கள் அந்த இடத்தில் சென்று பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். உடனடியாக கஞ்சனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தைப் பார்வையிட்டு அந்த பெண் அணிந்திருந்த நகைகளைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்தப் பெண் உடலில் தோடு, செயின், மூக்குத்தி, கை வளையல்கள் ஆகியவற்றை அணிந்திருந்தார். இதைப் பரிசோதனை செய்த போலீசார் அவை கவரிங் நகைகள் என்று கண்டறிந்துள்ளனர். அந்த பெண்ணின் உடலில் கருநீல நிறத்தில் டாப்ஸ், பிங்க் நிறத்தில் உள்ளாடையும் அணிந்து இருந்தார். அப்படிப்பட்ட அடையாளங்களுடன் யாராவது பெண்கள் காணாமல் போயிருந்தால் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது கஞ்சனூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சுடுகாட்டுப் பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்து அரைகுறையாகப் புதைத்துச் சென்ற அந்த மர்ம நபர்கள் யாராக இருக்கும்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.