கோவையில் கரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில், தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் ஆர்வம் செலுத்திவருகின்றனர். இதற்காக மாநகர் மற்றும் ஊரகப் பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகளை சுகாதாரத்துறையினர் செலுத்திவருகின்றனர். பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவில்லை. அதனால் அந்தக் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு, அதன்படி தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் சென்றனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரும் உடன் சென்றனர். தடுப்பூசி மீதுள்ள பயம் காரணமாக கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஒளிந்துகொண்டனர். இளைஞர்கள் சிலர் தடுப்பூசிக்குப் பயந்து மரத்தில் ஏறிக் கொண்டு இறங்க மறுத்தனர்.
முதியவர்கள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்கள் உள்ளதாக கூறி தடுப்பூசி வேண்டாமென சிறுபிள்ளை போல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்னர் சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தினர். சுமார் 500 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் 57 பேரும், 90 பேர் வசிக்கும் கிராமம் ஒன்றில் கிராமத்தில் 7 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவார்கள் என காத்திருந்தனர்.
பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குத் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்றால் தங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக கிராம மக்கள் பதிலளித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அருகே உள்ள மற்ற பழங்குடி கிராமங்களிலும் இதே நிலைதான் தொடர்ந்து வருகிறது. இதனால் எடுத்துச் செல்லப்பட்ட தடுப்பூசிகளோடு திரும்பினர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.