கந்து வட்டி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, 8 வழிச்சாலை திட்டத்தின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசாங்கமும் இணைந்து அந்த சாலையை அமைத்தே தீருவோம் என செயல்படுகிறது. இது போல் மக்களுக்கு எதிரான எந்த திட்டம் வந்தாலும் தடுப்போம்.
கந்து வட்டியால் மக்கள் தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் தங்களது நிலம், சொத்து, வீடு என பலவற்றை இழந்து, கந்து வட்டிக்காரர்களிடம் அவமானப்படுகின்றனர். 2003ல் கந்து வட்டி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாங்கம் அதனை துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் விவசாயிகள், தொழிலாளர்கள் என பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 20 கிலோ இலவச அரிசி ஏழை மக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுகிறது. ஒரே நாடு, ஓரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இலவச அரிசி என்கிற திட்டம் தமிழகத்தில் மூடப்படும். இதனால் ஏழை, அன்றாட காய்ச்சிகள் பெரிதும் பாதிக்கப்படுவர், அதனால் தமிழக அரசு இந்த திட்டத்தினை ஏற்றுக்கொள்ளகூடாது என்றார்.