ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மடத்தூரிலிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோக்கி 16 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.
ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு சார்பில் சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி குமரெட்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மாதா கோவில் பகுதி, பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மடத்தூரில் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறவழிச்சாலை வழியாகச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். எனவே ஊர்ச்சாலை வழியாகச் செல்ல அனுமதி கேட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதால் பேரணி தொடங்கியது. அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.