தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனையுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேற்று அறிவித்திருந்தது. அதில், ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டு உறை முறையில்) அதற்கான படிவத்தில் கோரப்படுகின்றன. இந்த ஒப்பந்தப்படிவத்தை 19/03/2022 முதல் 27/04/2022 வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி படிவம் 28/04/2022 அன்று மாலை 03.00 மணி வரை பெறப்பட்டு பின்னர் ஒப்பந்ததாரர் முன்னிலையில் 03.30 மணியளவில் திறக்கப்படும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் ஒப்பந்தப்புள்ளி படிவத்திற்கு ரூபாய் 1,000- க்கான தொகையைக் கேட்பு வரைவோலையாக M.D. S.E.T.C. என்ற பெயரில் எடுத்து ஒப்பந்தப்புள்ளி படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கேட்பு வரைவோலை இணைக்கப்படாத ஒப்பந்தப்புள்ளி படிவம் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி, பராமரிக்க வேண்டும்.
பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும்.
உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் தளமாக (அல்லது) Pavar Block போட்டிருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்கண்ட நிபந்தனையில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசு நீக்கியுள்ளது. சைவம் மற்றும் அசைவம் இருக்கலாம் என தற்பொழுது அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. பேருந்து பயணத்தின் போது நிறுத்தப்படும் உணவகங்களில் அதிக விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதோடு, சுகாதாரமற்ற முறைகள் உணவுப்பொருட்கள் இருப்பதாக எழுந்த தொடர் புகாரினை அடுத்து தமிழக அரசு வெளியிட்ட இந்த ஒப்பந்தப்புள்ளி விவரம் பலதரப்பட்ட மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.