வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆழ்வார்தாங்கள் பகுதியை சேர்ந்த தேவேந்திரன்-பாவித்ரா தம்பதியினரின் மகன் கரண். ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கரண் அடிக்கடி வயிற்று வலியால் அடிக்கடி துடித்துள்ளான். காட்பாடியில் உள்ள கிளினிக்கில் பரிசோதித்தபோது கிட்னியில் கல் இருப்பதாக தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் சரிச்செய்ய திருவலம் பகுதியில் உள்ள தனியார் கிளீனிக்கில் செப்டம்பர் 14 ந்தேதி காலை அனுமதித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்யும்போது ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி தனியார் கிளினிக் மருத்துவரே மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சிறுவன் கிரண் உயிரிழந்துள்ளார்.
உடனே, அந்த சிறுவன் உடலை 14 ந்தேதி இரவு 7 மணியளவில் ஆம்புலன்ஸ்சில் கொண்டு வந்து ஊர் அருகே சிறுவன் உடலோடு வண்டியை நிறுத்திவிட்டு ஊழியர்கள் ஓடிவிட்டனர். உடன் வந்த திருவலம் தனியார் கிளினிக் மருத்துவரும் காரில் தப்பியோடிவிட்டார். கல் என சிகிச்சைக்கு சென்ற சிறுவன் கிரண் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் சடலத்துடன் பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து கார்ணாம்பட்டு பகுதியில் காட்பாடி-திருவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற மறியலால் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. போலிஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து கிரண் பெற்றோரிடம் புகார் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என சமாதானம் செய்து மறியலை கைவிடவைத்தனர்.