திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு வெளி கிராம நிர்வாக அலுவலராக நவநீதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் எந்த வகையான சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றாலும் பணம் கொடுக்காமல் சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற விவசாயி பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ளார். இதற்கு வி.ஏ.ஓ நவநீதன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ நவநீதனை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென வடக்கு வெளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து அலுவலகத்தை உள்புறமாக தாழிட்டு கிராம நிர்வாக அதிகாரி நவநீதனிடம் தொடர்ந்து 3 மணி நேரமாக விசாரணை செய்து வருகின்றனர்.