
கடந்த பிப்ரவரி மாதம் சேலம், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கச்சென்ற ஒரு பெண் எஸ்.பி.யை சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்தவர் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்ததாக அந்தப் பெண் எஸ்.பி, டி.ஜி.பி. திரிபாதி மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை அடுத்து இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான கூடுதல் டி.ஜி.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்து, பெண் எஸ்.பி.யை மிரட்டிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்தப் பெண் எஸ்.பி.யின் புகார் தொடர்பாக 80க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிஜிபி மீது புகார் அளித்த அந்தப் பெண் எஸ்.பி. 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேடிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவுசெய்துகொண்டுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் போலீஸ் அதிகாரி புறப்பட்டுச் சென்றதாக விழுப்புரம் நீதிமன்ற வட்டாரத்தில் கூறுகின்றனர்.