Skip to main content

ஆளில்லா வீட்டில் கைவரிசை; பக்காவாக ப்ளான் போட்ட பெண்; காப்பு போட்ட காவல்துறை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Woman arrested for stealing seven and a half pounds worth of jewellery

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அடரியைச் சேர்ந்த அழகேசன் என்பவரது மகன் கபிலன் (வயது 32). இவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கபிலன் தனது வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டின் மாடத்தில் வைத்துவிட்டு மனைவியுடன் விருத்தாசலத்திற்கு சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த பார்த்தபோது பீரோவில் இருந்து துணிமணிகள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் 350 கிராம் வெள்ளிப் பொருட்களைக் காணவில்லை.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து சிறுபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கபிலன் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கதவைத் திறந்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வெள்ளி பொருட்களை  கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

 

இதனிடையே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காவியா மேற்பார்வையில், வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கபிலன் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் கபிலன் வீடு இருந்த பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்தது தெரிய வந்தது.

 

இதையடுத்து அந்தப் பெண் குறித்து விசாரித்ததில் அவர் பெரம்பலூர் அருகேயுள்ள லப்பைகுடிகாட்டைச் சேர்ந்த ஹலிக் பாஷா என்பவரது மனைவி சம்ஷாத்(33) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பெரம்பலூர் சென்று அவரை மடக்கிப் பிடித்து, பின்னர் சிறுபாக்கம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கபிலன் தனது வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள ஓட்டு வீட்டின் மாடத்தில் வைத்ததை நோட்டமிட்டு சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்ஷாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்