காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சிக்கு விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையில் ஆளுநரின் துணையோடு சட்டவிரோத முறையில் ஆட்சிக்கு வர முயன்ற பாஜகவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றிப் பெற்றிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.
கர்நாடகாவில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பாஜக தலைவர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் தான் பொறுப்பு. அவர்களது வழிகாட்டுதல் இல்லாமல் ஆளுநர் இப்படி செயல்பட்டிருக்கமாட்டார். கோவா, மணிப்பூர், மேகாலயா என அடுத்தடுத்து சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவுக்கு கர்நாடகாவில் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது
எடியூரப்பா முதலமைச்சரானதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அந்த உத்தரவுக்கு சட்டரீதியான மதிப்பு எதுவும் இல்லை என்றாலும் புதிதாகப் பதவி ஏற்க உள்ள குமாரசாமி அரசு அதையே தனது முதல் உத்தரவாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
நீண்ட காலமாக கர்நாடக – தமிழக மக்களுக்கு இடையே கசப்புணர்வை ஏற்படுத்தி வந்த காவிரி பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காத்திருக்காமல் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட்டு தென்மாநில மக்களுக்கு இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த கர்நாடகாவில் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் குமாரசாமி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார்.