சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் மாலை மற்றும் இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. போளூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது என்றார்.