
கோடைகாலம் நெருங்கி வருவதால் மீண்டும் நீலகிரியின் கூடலூர் வாகனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் படையெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அருகே உணவு தேடிவந்த காட்டு யானை ஒன்று தண்ணீர் குட்டைக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மூக்கானூர் பகுதியில் குட்டப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்திற்கு அருகிலேயே இருந்த சிறிய நீர் இருந்த குட்டையில் யானை சிக்கிக்கொண்டது.
உடனடியாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்/ அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குட்டையின் ஒரு பகுதியில் யானை எளிதாக வெளியேறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் பின்னர் காட்டு யானை குட்டையில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.