அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மூன்று கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையோடு நான்கு வருட அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கு சென்னிமலை மாணவி சுவேகா (வயது 17) தேர்வாகியுள்ளார். இந்தியாவிலிருந்து செல்லும் ஒரே மாணவி என்ற பெருமையையும் சுவேகா பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த காசிபாளையத்தைச் சேர்ந்த விவசாய குடும்ப தம்பதி சுவாமிநாதன் - சுகன்யா. இவர்களது மகள் சுவேகா. சென்னிமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த விழா ஒன்றில் பேசிய சிறப்பு விருந்தினர், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் அறிவியல் ஆராய்ச்சியப் படிக்க முடியும் என பேசியதைக் கவனித்த மாணவி சுவேகா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, நிர்வாக ஆளுமை, தொழிற்திறனுக்கான பயிற்சியை ஆன்லைன் மூலம் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டே, தினமும் 16 மணி நேரம் கடின உழைப்பால் சுவேகா முடித்தார். அதைத் தொடர்ந்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நான்கு ஆண்டு படிப்பில் சேர்வதற்கு சுவேகா விண்ணப்பித்திருந்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான தேர்வுக் குழு, அதை ஆராய்ந்து நான்கு ஆண்டு அறிவியல் இளங்கலைப் படிப்புக்கு சுவேகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளது. கல்விக்கட்டணம், தங்கும் விடுதிக்கட்டணம், போக்குவரத்து செலவு என மூன்று கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை அவர் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய குடும்பத்திலிருந்து அமெரிக்கா செல்லும் மாணவிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
உலகின் டாப் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்று சிகாகோ பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.