சேலத்தில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவைச் சேர்ந்த குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பத்மாவதி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வழிப்பறி ஆசாமிகளைத் தேடி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டம், ஜார்ஜின் சோலியைச் சேர்ந்த ஆஷிக் அலி மகன் முகமது ஆஷிப் அலி (வயது 23), பிதார் மாவட்டம் இரானி ஹள்ளி பத்ரோதின் காலனியைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் ஷபி என்கிற ஷபிஷேக் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த மூன்று வருடங்களில் சேலம் சூரமங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி பகுதிகளில் மொத்தம் 25 பவுன் நகைகளை பறித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதற்காக மோட்டார் சைக்கிள்களையும் திருடி வந்துள்ளனர்.
இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் இவர்கள், ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குச் சென்ற பிறகு, அவர்களுக்குச் சொந்தமான இன்னோவா காரில் தப்பிச்சென்று விடுவதையும், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பதையே முழு நேரத்தொழிலாக கொண்டிருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
சேலம் மட்டுமின்றி தர்மபுரி மாவட்டத்திலும் இதேபோல் பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்களிடம் இருந்து தங்க சங்கிலிகள், மோட்டார் சைக்கிள்கள், இன்னோவா கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் சிலரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் வழிப்பறி ஆசாமிகள் முகமது ஆஷிப் அலி, ஷபி என்கிற ஷபிஷேக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் ஏப். 30- ஆம் தேதி கைது செய்தனர்.
ஏற்கனவே, வழிப்பறி சம்பவத்தில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் வழங்கினர்.