
திருவள்ளூர் அருகே லிப்ட் மெக்கானிக் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சின்னம்பேடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (30). திருமணம் ஆகாத நிலையில் லிப்ட் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மெக்கானிக் சங்கர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் அவரை அவரது குடும்பத்தார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சின்னம்பேடு ஏரிக்கரை பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தது லிப்ட் மெக்கானிக் சங்கர் என்பது தெரிய வந்தது. தலையில் இரு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையிலான போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முன்விரோதத்தால் ஏற்பட்ட கொலையா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து சங்கரின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.