![The wife who was hanging from the tree ... The husband who cried when he saw live](http://image.nakkheeran.in/cdn/farfuture/kEsR947WfrynH3DbriWznF5oPvTxwW9gKSHqqf7Dwwc/1628054205/sites/default/files/inline-images/trichy-ilanjiyam.jpg)
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் ஊராட்சி, பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி இளஞ்சியம் (50). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்குமே திருமணமான நிலையில், பெருமாள் மற்றும் இளஞ்சியம் இருவரும் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்துவந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (03.08.2021) அவருடைய விவசாய நிலத்திற்கு அருகில் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளஞ்சியம், நீண்ட நேரமாகியும் வராததால் அவருடைய கணவர் பெருமாள் தேடிச் சென்றுள்ளார். அப்போது இளஞ்சியம் அரை நிர்வாண கோலத்தில் மரத்திலே தூக்கிலிடப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கு, மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உள்ளிட்ட துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் இளஞ்சியத்தின் செல்ஃபோனைக் காணவில்லை என்றும், ஆடு, மாடுகள் கட்டும் இடத்தில் வளையல்கள் உடைந்து கிடப்பதாகவும், உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டுள்ளதால் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துவருகின்றனர். தூக்கிலிடபட்ட நிலையில் இருந்ததால் உறவினர்களிடையேயும் பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.