நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி தமிழக நலன் சார்ந்த பல்வேறு அதிரடி கேள்விகளைக் கேட்டு சபையை அதிர வைத்திருக்கிறார்.
லோக்சபாவில் பேசிய தயாநிதிமாறன், "குஜராத் மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு வெள்ள நிவாரண நிதியாக 500 கோடியை மூன்றே நாட்களில் வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்னும் வெள்ள நிவாரண நிதியை வழங்காதது ஏன்"?
தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையினை வழங்குவதில் தாமதம் ஏன்? விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய கடன்களுக்கு எந்த சலுகையும் வழங்காமல் வசூல் செய்யும் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கு மட்டும் பெருமளவு சலுகைகள் வழங்குவது ஏன்?
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் 61,562 கோடி ரூபாய். இதில் 42,262 கோடி ரூபாயை கடனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வெறும் 18,000 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவை விற்பதற்கு பதில், ஏன் அந்த மீதி தொகையையும் அரசே செலுத்தி பொதுத்துறையில் ஏர் இந்தியாவை தக்க வைக்கக் கூடாது?
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதியை எப்போது உயர்த்தி வழங்குவீர்கள்? என அடுக்கடுக்காக அவர் எழுப்பிய கேள்விகள் லோக்சபாவை அதிர வைத்திருக்கிறது.