காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி ஜூன் 12ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி அளித்த மனுவை காவல்துறை நிராகரித்தது. இதை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ப்பி.என். பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி தராததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போராட்டம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் திருவாரூர் டி.எஸ்.பி., திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.