
அதிமுகவுக்கு ஓட்டு போடமாட்டோம் என சின்னமனூரில் சீர்மரபினர் நலச் சங்கத்தினர் பால், விளக்கு மீது சத்தியம் செய்து போராட்டம் நடத்தினார்கள். தென் மாவட்டங்களில் உள்ள 68 சமூகங்களை உள்ளடக்கிய சீர்மரபினர் நலச் சங்கத்தினர், தங்களுக்கு டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் அச்சமுதாயத்தினர் இடம்பெற்றுள்ள எம்.பி.சி. பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சின்னமனூர் அருகே அப்பிபெட்டியில் சீர்மரபினர் நலச் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது அதிமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் எனக் கூறி சமுதாய மக்களுடன் சேர்ந்து பால், அகல் விளக்கு மீது சத்தியம் செய்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், சீர்மரபினரின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு தேர்தல் அரசியலுக்காக, சீர்மரபினர் மக்களின் இட ஒதுக்கீட்டை மாற்றுச் சமூகத்திற்கு அதிமுக அரசு தாரை வார்த்துள்ளது. எனவே, வரும் தேர்தலில் அதிமுகவை படுதோல்வி அடையச் செய்வோம். இதற்குத் தேனி மாவட்ட சீர்மரபினர் நலச் சங்கத்தின் சார்பில் எங்கள் சமுதாய மக்களிடம் அதிமுகவுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என பாலின் மீதும் அகல் விளக்கு மீதும் சத்தியம் வாங்கிப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினர்.