
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை ஏற்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தண்ணீர் திறந்தால் பிரச்சனை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கீழ் பவானி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இன்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. வருகிற 20 ஆம் தேதிக்குள் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அரசு அறிவித்தவாறு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 22 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.