Skip to main content

அரசு பள்ளியில் கோயில்கள் அறிவோம் புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம்! 

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

We know about temples in government school photo exhibition, seminar!

 

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 'கோயில்கள் அறிவோம்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவன் அ.முகம்மது சகாபுதீன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். 

 

கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பள்ளித் தலைமையாசிரியர் இ.சண்முகநாதன் பேசியபோது, "கோயில்கள் நம் பண்பாட்டின் அடையாளமாக உள்ளன. பள்ளிப் பாடநூல்களில் நமது பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் கோயில்கள் பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன" என்று கூறினார். 

 

"தமிழ்நாட்டின் கோயில்கள் பண்பாடு, அறிவியல், மருத்துவம், கல்வி, கலை, வரலாறு, தொல்லியல் ஆகியவற்றின் அருங்காட்சியகங்களாக விளங்குகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய கோயில் கல்வெட்டுகள் உதவுகின்றன. கோயில்களில் பின்பற்றப்பட்ட மரபு தொழில்நுட்பம் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. கோயில்களின் சிறப்புகளை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும்" என மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கருத்தரங்க அறிமுக உரையில் கேட்டுக் கொண்டார்.

 

கருத்தரங்கத்தில் ஆலயம் பற்றி ரா.பைரோஸ், குடைவரைக் கோயில்கள் பற்றி ம.திவாகரன், கற்றளிகள் பற்றி ஜீ.ஹரிதா ஜீவா, பள்ளிப்படைக் கோயில்கள் பற்றி செ.கனிஷ்கா, மாடக்கோயில்கள் பற்றி பூ.பூஜாஸ்ரீ, கோயில் காப்புக் காடுகள் பற்றி ப.மகாஸ்ரீ ஆகியோர் பேசினர். ஆறாம் வகுப்பு மாணவி சா.சுபா நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் மு.தீபிகாஸ்ரீ, ஜெ.வித்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

 

புகைப்படக் கண்காட்சியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள், முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கற்கோயில்கள், பள்ளிப்படை, மாடக்கோயில்கள், காடுகள் சூழ்ந்த கோயில்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. படங்கள் பற்றி மாணவியர் விளக்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கு.முகம்மது காமில், ச.செல்வக்கண்ணன், பா.சாம்ராஜ், ப.யோகேஷ்வரன், முகேஷ்பிரியன் ஆகியோர் செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.